Tuesday, January 24, 2012

நம் விருப்பமா உலகை இயக்குகிறது?

நம் விருப்பமா உலகை இயக்குகிறது?
கடவுள் பொருள்களை முழுமையாகப் பார்க்கிறார். மனிதன் பொருள்களை பகுதியாக பார்க்கிறான். மனிதன் கடந்த காலம் மற்றும் எதிர் காலத்திலிருந்து பிரிந்து, நிகழ்ச்சிகளை  நிகழ் காலத்தில் மட்டுமே பார்க்கிறான். கடவுளுக்கோ முன் நடந்ததும், பின் நடக்க வேண்டுவதும் தெரியும். அதனால் தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார். மனிதன்  வேற்றுமையைக் காண்கிறான். கடவுள் பூரணமான நியாயத்தைக் காணும் அதே தருணத்தில், மனிதனோ அதைக் காண்பதில்லை. நீங்கள் உங்களை கடவுளின் இடத்தில் வைத்துப் பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள். பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும், அனைத்தும் உங்கள் விருப்பத்தாலே நிகழ்கின்றன என்றும் உணருங்கள். உடனேயே உங்களுள் அபரிமிதமான அமைதியும், ஆற்றலும் ஊற்றேடுப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


பிறர் நம்மைத் திட்டும்போது...

பிறர் உங்களைக் காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும்  நீங்கள் கூறுகின்றீர்கள். அது உண்மையாக இருந்தாலும் கூட, அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள். இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். யாராவது உங்களைத் திட்டினால் கண்களை மூடிக் கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம் போல் நினைக்கட்டும்.அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும்

இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள்.

எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும், அனைத்திடத்தும் கடவுளைக் காணக் கற்றுக் கொண்டால் தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். அதுவே ஒரு தவம். ஆன்மீகதில் நீங்கள் உயர்வடைவீர்கள்.



No comments:

Post a Comment